இன்று ஒரேநாளில் 75பேருக்கு உறுதி: கொரோனா பாதிப்பில் 2வது இடத்துக்கு உயர்ந்த தமிழகம்

சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றுமுதல் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 110 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில்  75பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதியாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில், தமிழகம் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ள அவலம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.  சமீபத்தில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்லாமியர்களிடையே கொரோனா தொற்று பாதிப்பு கட்ணடறியப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று  மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். ஒருவர் சென்னை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தகவலை  சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தி உள்ளார்.

மேலும், தமிழகத்தில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாகவும், சிலருக்கு முடிவுகள் வரவேண்டியது உள்ளதாகவும் தெரிவித்து உள்ளர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, வீட்டுக்கண்காணிப்பில் 86,342 உள்ளதாகவும், அரசு கண்காணிப்பில் 90 பேரும் உள்ளனர். 28 நாள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு முடிவடைந்து 4,070 பேர் சென்றிருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது.

கொரோனா தொற்றில் முதலிடத்தில் உள்ளது மகாராஷ்டிரா மாநிலம். இங்கு  இன்று மேலும் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.  அங்கு உயிரிழப்பும்  19 ஆக அதிகரித்துள்ளது.

அதைத்தொடர்ந்து 3வது இடத்தில் கேரள மாநிலம் உள்ளது.  அங்கு இதுவரை  286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.