அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் பதில்

சென்னை:
ரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முடிவெடுக்க சிறிது காலம் தேவைபடுகிறது என்று தனக்கு கடிதம் எழுதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார்.

மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை ஆளுநர் உடனடியாக வழங்க வேண்டும் என்று அவருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளேன். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் சட்டமன்றத்தின் உரிமை மற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும். ஆளுநர் இதில் மேலும் பாராமுகமும், தாமதமும் காட்டுவது நல்லதல்ல. இந்த நேர்வில், மாநில உரிமைகளுக்காக அ.தி.மு.க. அரசுடன் இணைந்து போராட, தி.மு.க. தயாராக இருக்கிறது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், உடனடியாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி, என்னவகைப் போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து அறிவித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!” என்று அதில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முடிவெடுக்க இன்னும் 3 முதல் நான்கு வாரங்கள் ஆகும் என்றும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.