ஆந்திரா வந்த 75 இத்தாலி நாட்டினர் – 2 வாரங்கள் தனித்திருக்க அறிவுறுத்தல்!

விஜயவாடா: இத்தாலி நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு விஜயம் செய்த 75 சுற்றுலாப் பயணிகள், அடுத்த 2 வாரங்களுக்கு, தங்குமிடத்திலேயே தனித்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உலகிலேயே சீனாவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது இத்தாலி. அந்நாட்டில் இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில். கடந்த பிப்ரவரி 29ம் தேதி முதல், இத்தாலியிலிருந்து ஆந்திராவுக்கு சுற்றுலா வந்த பயணிகள் 75 பேர், தங்குமிடத்திலேயே தனித்திருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்தாலி நாட்டிலிருந்து சென்னை வழியாக நெல்லூர் திரும்பிய ஒரு மாணாக்கருக்கு வறட்டு இருமல் இருக்கவே, அவரைப் பரிசோதித்ததில், தொற்று இல்லை என்ற முடிவு கிடைத்தது.

தற்போது நெல்லூர் மருத்துவமனையில் ஒரு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தொடர்பான சோதனை மாதிரிகள், புனேவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.