நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள்: பாஜகவுக்கு ஐக்கிய ஜனதாதளம் வலியுறுத்தல்

பாட்னா:

நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  அறிவித்தால், நாட்டில் உள்ள  75% முஸ்லிம்கள் வாக்கு  கிடைக்கும் என்றும் நிதிஷ் குமாரின்  ஐக்கியஜனதாதளம்  பாஜகவுக்கு யோசனை தெரிவித்து உள்ளது.

பீகார் மாநிலத்தில் பாஜ ஆதரவுடன் ஆட்சி நடத்தி வரும் முதல் நிதிஷ்குமார், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் அறிவித்து உள்ளார். இந்த நிலையில் மத்திய அரசின் முத்தலாக் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், நாடாளு மன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி உடன்பாடும் செய்துள்ளார். 17 தொகுதிகளில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், 17 இடங்களிலும் பாஜகவும் போட்டியிடு வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வரும் முத்தலாக் சட்டத்துக்கு நிதிஷ்குமார் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே பாஜக ராமர்கோவில்கட்டும் திட்டம் குறித்து அறிவிக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ள நிதிஷ்குமார், தற்போது முத்தலாக் விஷயத்திலும் பாஜகவுக்கு எதிராக கொடி பிடித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதாதள கட்சியின் மேல்சபை உறுப்பினரான பல்யாவி (Balyawi), நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டு மானால், பிரதம மந்திரி வேட்பாளர் யார் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்க வேண்டும் என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தியவர், அவ்வாறு அறிவித்தால், இந்தியாவில் 75% முஸ்லிம்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும்  முத்தலாக் விஷயத்தில் ஜே.டி.யு.யின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாக கூறினார். டிரிபிள் லாக்  என்பது ஒரு முஸ்லீம் தனிப்பட்ட சட்டம் சம்பந்தப்பட்ட ஒரு மதப் பிரச்சினை யாகும்,  இது அரசாங்கத்தில் தலையிடக் கூடாது என்று பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.  மேலும், பாஜக அரசு  வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டுமே தவிர, மத திருமணத்தில் தலையிடுவது சரியல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், முத்தலாக் மசோதா விவகாரத்தில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எந்த தனிநபரோ அல்லது கட்சியோ குறுக்கிடாது என்றவர்,  அரசாங்கத்தின் குறுக்கீட்டை ஏற்க மாட்டோம்,” என்று அவர் கூறினார்.

ராம் கோவில் பிரச்சினை  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது ஒரு கோவிலின் விஷயம் அல்ல, ஆனால் அது ஒரு நில பிரச்சினை என்றவர்,  ராமர்கோவில் கட்டப்படும் என நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்தால், வாக்கு வங்கிகள் சிதறிவிடும் என்ற நோக்கில் பாஜக தயவால் ஆட்சி செய்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் , ராமர் கோவில் கட்டும் திட்டம் இல்லை என்று கூறினார்.

இவ்வாறு பல்யாவி தெரிவித்தார்.