திருவள்ளூரில் இன்று 75 பேர் பாதிப்பு: செங்குன்றத்தில் வாரத்தில் 3நாட்கள் கடைகள் அடைக்க வணிகர்கள் முடிவு…

திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டத்தில்  இன்று மேலும்  75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், அம்மாவட்டதைச் சேர்ந்த செங்குன்றத்தில்  வாரத்தில் 3நாட்கள் கடைகள் அடைக்க வணிகர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவல் தீவிரமடைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,581 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும்  75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,656 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 795 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, செங்குன்றம் பகுதியில் வாரத்தில் 3 நாட்கள் கடைகளை அடைக்க வணிகர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, வாரத்தில், திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கடைகளை அடைக்க வணிகர்கள் முடிவு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.