ஒரே ஒரு மாணவனுக்காக திறக்கப்பட்ட 76 வருட அரசுப் பள்ளி

கோவை

76 வருடமாக இயங்கி வந்த அரசுப் பள்ளி ஒன்று ஒரே ஒரு மாணவனுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சின்னகல்லார் என்னும் சிற்றூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.   கடந்த 1943 ஆம் வருடம் இந்த பகுதி மக்களின் குழந்தைகள் கல்விக்காக அரசு ஒரு தொடக்க பள்ளியை ஆரம்பித்தது.  வருடத்துக்கு 50 மாணவர்கள் இங்கு கற்று தேர்ச்சி பெற்றனர்.  இந்த பள்ளியை தமிழக தலித் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தி வருகிறது.

இந்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்தன.   அத்துடன் பலர் யானையால் தாக்கப்பட்டனர்.  அதனால் இந்த பகுதி மக்கள் இங்கிருந்து வெளியேறினார்கள்.  பள்ளிகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் யானைகள் தாக்கி உடைத்தன.   அதனால் இந்த பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

கடந்த 2017-18 ஆம் வருடம் இந்த பள்ளியில் ஒரு மாணவர், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு தலைமை ஆசிரியர் இருந்தனர்.  அந்த ஒரு மாணவரும் வேறுபள்ளியில் சேர்ந்துள்ளார்.  தற்போது யானைகளின் தாக்குதல் இல்லாத போதிலும் பள்ளியில் மாணவர் யாரும் இல்லாததால் சென்ற வருடம் இந்த பள்ளி மூடப்பட்டது.

இந்த பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி என்னும் தேயிலை தோட்ட தொழிலாளி தனது மகனை இந்த பள்ளியில் சேர்க்க விரும்பினார்.  அதனால் இந்த பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என மனு அளித்தார்.    இது நடைபெறாது என அவர் நினைத்த வேளையில் பள்ளி திறக்கப்பட்டு இவர் மகன் ஒன்றாம் வகுப்பில் செர்க்கப்பட்டுள்ளார்.   தற்போது இது ஓராசிரியர் பள்ளியாக இயங்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.