டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 76வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், மத்தியஅரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டி திக்ரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளில் ஒருவர் தற்கொலை கொண்டுள்ளார். இது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் வடமாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 2 மாதங்களை கடந்தும் தொடர்கிறது. ஜனவரி 26ந்தேதி பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த 6ந்தேதி சக்கா ஜாம் என்ற பெயரில் நாடு முழுவதும் 3 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், திக்ரி எல்லையில் போராடி வரும்  பாரதிய கிசான் யூனியன் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், போராட்ட கூடாரம் அருகே இறந்து கிடந்ததார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வு  சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  அவர்,  அரியானாவின் ஜிந்தைச் சேர்ந்த 52 வயதான விவசாயி என்பது தெரிய வந்துள்ளது, அவரிடம் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய காவல்துறையினர்,  தற்கொலை செய்துகொண்ட நபர் பெயர் கரம்பீர் சிங் என்பதும்,  தனது மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு பேருடன் அங்குள்ள ஒரு கூடாரத்தில் தங்கிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று கூடாரத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள பூங்காவில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார் என்று கூறியுள்ளனர்.

அவரிடம் கிடைத்த கடிதத்தில், மத்தியஅரசு  விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியும், அதனால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவரது கடிதத்தில், “பாரதிய கிசான் யூனியன் ஜிந்தாபாத்” உடன் தொடங்கி, “அன்புள்ள விவசாயி சகோதரர்களே, இந்த மோடி அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், பேச்சு வார்த்தை என தேதிக்குப் பின் தேதியைத் தருகிறது. இந்த கருப்பு சட்டங்கள் எப்போது ரத்து செய்யப்படும் என்று யூகிக்க முடியாது. இந்த கருப்பு சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம். ” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.

திக்ரி எல்லையில் ஏற்கனவே பல விவசாயிகள் இறந்துள்ளனர்.  கடந்த மாதம், ரோஹ்தாக்கைச் சேர்ந்த 42 வயதான விவசாயி ஒருவர் சல்பாஸ் மாத்திரைகளை உட்கொண்டு சிகிச்சை பெற்று இறந்தார். டிசம்பரில், பஞ்சாபின் ஜலாலாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விஷம் குடித்து சிகிச்சையில் இருந்தபோது இறந்தார்.

விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட கரம்பீர் மூன்று பெண்குழந்தைகளுக்கு  தந்தை, அவர்களில் ஒருவர் திருமணமானவர், ஜிந்தில் உள்ள சிங்வால் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஏழு சகோதரர்கள் உள்ளனர்.