24 மணி நேரத்தில் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று: மகாராஷ்டிரா காவல்துறை அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 77 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் இங்கு தான் பதிவாகி இருக்கின்றன.

அங்கு இதுவரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 761 ஆக அதிகரித்து இருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்து வரும் காவல்துறையினரும் நோய் பாதிப்பில் இருந்து தப்பவில்லை.

இந் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,887 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு காவலர் உயிரிழந்துள்ளார். அதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 1,015 காவலர்கள்  மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.