கொல்கத்தா

நேற்று நடந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் 79.79% வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.  இதில் 30 தொகுதிகள் இடம்  பெற்றன.   மொத்தம் 8 கட்டங்களாக இம்மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளன.   கடைசிக்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று முடிவடைந்து பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நேற்று நடந்த முதல் கட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.  அப்போதிலிருந்தே மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு திரள் திரளாக வந்து வாக்களித்தனர்.   இம்முறை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முகக் கவசம், சானிடைசர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.  அவர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

கொரோனாவை முன்னிட்டு நேற்று ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.  வாக்களிப்பு நேற்று மாலை 6.30 மணிக்கு முடிவடைந்துள்ளது.  நேற்று மேற்கு வங்கத்தில் 79.79% பேர் வாக்களித்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.