7வது பொருளாதார கணக்கெடுப்புப் பணி தீவிரம் – அடுத்தாண்டு மார்ச்சில் நிறைவு?

புதுடெல்லி: தற்போது நடந்துவரும் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி, அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்.

பொருளாதாரக் கணக்கெடுப்பு முறை இந்தியாவில் கடந்த 1977ம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில், ஒவ்வொரு குடும்பத்தினுடைய பொருளாதார வசதி மற்றும் வணிக நிறுவனங்களின் நிதியாதாரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேரிக்கப்படும்.

சேகரிக்கப்படும் இந்த விபரங்களை அடிப்படையாக வைத்து, நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கப்படும். பணியமர்த்தப்படும் கள ஆய்வாளர்கள், ஒவ்வொரு வீடாக சென்று தேவையான விபரங்களைச் சேகரிப்பர். இதேபோன்று நிறுவனங்களின் விபரங்களும் சேகரிக்கப்படும்.

தற்போது நடைபெறும் 7வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி ஜூலை 29ம் தேதி துவங்கியது. மேலும், இந்தப் பணி முதல் தடவையாக மின்னணு முறையில் தற்போது நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில், இதற்காக ஒரு தனிப்பட்ட ‘ஆப்’ பயன்படுத்தப்படுகிறது.

இந்த ‘ஆப்’ மூலமாக தகவல்களைத் துல்லியமாகப் பெற முடிவதோடு, அவற்றை தகுந்த முறையில் சேமித்தும் வைத்திருக்க முடியும் எனப்படுகிறது. இப்பணியில் மொத்தம் 1.50 லட்சம் கள ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.