Random image

மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: அடுத்த மாதம் முதல் சம்பள உயர்வு!

டில்லி,

7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி வரும் ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள பரிந்துரை குறித்த 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிறது. ஆனால், இதுவரை அமல்படுத்தப் படாமல் இருந்தது.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ., உள்ளிட்ட திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய முழு சம்பளம், ஜூலை மாதம் முதல் கிடைக்கும்.

நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 51 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இந்த சம்பய உயர்வால் பயன்பெறுவார்கள்.

7வது சம்பள கமிஷன் குறித்த அதிருப்தி காரணமாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் லாவாசா, தலைமையிலான அரசு செயலர்கள் அடங்கிய உயர் அதிகாரக் குழு ஆய்வு செய்தது.

இந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்று வரும் ஜூலை மாதம் முதல் புதிய சம்பள  விகிதம் அமலுக்கு வருதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் சம்பளத்தில் அளிக்கப்பட்டு வரும் வீட்டு வாடகை படி (எச்ஆர்ஏ)  30%, 20% மற்றும் 10% ஆகியவை அவர்கள் வசிக்கும் நகரத்தை பொறுத்து 10% மாறாமல் இருக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

7 வது சம்பள ஆணையம், ஹெச்.ஆர்.ஏ 24 சதவீதமாகவும், அடிப்படை ஊதியத்தில் 16 சதவீதமாக வும், 8 சதவீதமாகவும் குறைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வர இருக்கும்  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, படிகள் உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, வரும், ஜூலை மாதம் முதல், திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய புதிய சம்பளம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என தெரிகிறது.