டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் பிடிவாதமாக இருந்து வருவதால், நேற்று நடைபெற்ற 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், விவசாயிகள் போராட்டமும் இன்று 41வது நாளாக தொடர்கிறது. போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக விவசாய அமைப்புகள் தீவிரமாக விவாதித்து வருகின்றன.

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா உள்பட சில வட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர் மற்றும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் இன்று 41வது நாளாக நீடித்து வருகிறது. இதற்கிடையில், சுமார் 60 விவசாயிகளும் உடல்நலப் பாதிப்பு மற்றும் கடும் குளிர் காரணமாக மரணத்தை தழுவி உள்ளனர்.

 டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவியது. இதனால்,  போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குளிரில் நடுங்கினர்.  இந்நிலையில், டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் பகுதிகளில் ஒன்றான சிங்கு பகுதியில் இன்று அதிகாலை முதலே மீண்டும்  மழை பெய்து வருகிறது. மழைநீர்  விவசாயிகள் அமைத்துள்ள கூடாரங்களுக்குள் புகுந்ததுள்ளதால், விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கிடையில், விவசாய அமைப்புகளுடன் மத்தியஅரசு நடத்திய 7 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று நடைபெற்ற 7வது கட்ட பேச்சுவார்த்தை   4 மணி நேரத்திற்க்கும் மேலாக நீடித்த நிலையிலும் உடன்பாடு ஏற்படாததால், விவசாய சங்க தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 8வது கட்ட பேச்சுவார்த்தை வரும் 8ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாய அமைப்பினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.