ஏழு வயதில் 100 கோடிக்கும் மேல் சம்பாதித்து அசத்தும் சிறுவன்

நியூ யார்க்:

போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள மிக அதிகமான ஊதியம் பெற்ற யு-டியூப் நட்சத்திரங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது ஏழு வயதான அமெரிக்க சிறுவன் ரியான்.

போர்ப்ஸ் கணக்கின்படி, ஜாக் பால் மற்றும் டேனியல் மிடில்டன் போன்ற பெரியவர்களை பின்னுக்கு தள்ளி 22 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வருவாய் ஈட்டி, இந்த ஆண்டு மிக அதிகமான ஊதியம் பெற்ற யு-டியூப் நட்சத்திரமாக மாறியுள்ளார் ரியான்.

இந்த பட்டியலில், பிரபல யு-ட்யூபரான ஜேக் பால் 21.5 மில்லியன் டாலர்கள் ஈட்டி இரண்டாம் இடத்தையும், ட்யூட் பெர்ஃபெக்ட் சேனல் 20 மில்லியன் டாலர்கள் ஈட்டி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ரியான் யு-டியூப் சேனலில் பகிரப்படும் காணொளிகள் 26 பில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த சேனலை 17.3 மில்லியன் வாடிக்கையாளர்கள் பின் தொடர்கிறார்கள்.

காணொளி தொடங்குவதற்கு முன் வரும் விளம்பரம் மூலம் ஒரு மில்லியன் டாலர்களும், மீதம் உள்ள தொகையை விளம்பரதாரர்களுக்காகவே தயாரிக்கப்படும் வீடியோக்கள் மூலமும் ஈட்டி உள்ளார்.

இந்த யு-டியூப் பக்கத்தில் ரியான் விமர்சனம் செய்யும் பொம்மைகள் உடனடியாக விற்றுவிடுகின்றன. வால்மார்ட்டுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலமாக ரியானின் வருவாய் அடுத்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என நம்பப் படுகிறது.

ரியான் கடந்த ஆண்டு சிறுவர்களின் பொழுதுபோக்கு ஸ்டூடியோ பாக்கெட்.வாட்ச் (Pocket.watch) உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டார். மேலும், அக்டோபரில், அவருடைய சேனலில் இருந்து விடியோக்கள் ஹுலு மற்றும் அமேசனில் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியான் சிறுவன் என்பதால், அவருடைய வருவாயில் 15 சதவீதம் வங்கியில் போடப்படும். அவர் பெரியவரான பின் தான் அந்தப் பணத்தை எடுக்க முடியும்.