நாடு முழுவதும் 8.39 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்
டில்லி:
நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இதுவரை 8.39 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு இருப்பதாக மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார்.
சுவாஜ் பாரத் அபியான் ( Swachh Bharat Abhiyan) என்ற திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கமே நாடு முழுவதும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளில் உள்ள சாலைகளும் சுத்தம், சுகாதாரமாக இருக்க வேண்டும், திறந்த வெளிகளில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே.
இந்த நிலையில், மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை யொட்டி, சர்வதேச சுகாதார மாநாட்டு வரும் (செப்டம்பர்) 29-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த மாநாடு தொடர்பான விளக்கக் கூட்டம் இன்று தலைநகர் டில்லியில் நடைபெற்றது. இதில் டில்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலாளர் பரமேஸ்வரன் ஐயர்,
‘தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 8.39 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சுமார் 4.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா கிராமங்களாக அறிவித்துள்ளன என்று கூறினார்.
மேலும், தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியதில் இருந்து கிராமப்புற சுகாதார மேம்பாடு அதிகரித்துள்ளது. 2014ல் 550 மில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்திய நிலை இருந்தது. தற்போது அது 150 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.