குற்றம் கடிதல்: 8

 
ழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ’மாதொருபாகன்’ நாவல் குறித்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் நடுநிலை குறித்து விவாதம் எழுந்துள்ளது.
பொதுவாக, ஊடகங்களின் நடுநிலை குறித்து இப்படிக் கூறுவதுண்டு: செய்திகளை வழங்கும்போது அனைத்துத் தரப்புச் செய்திகளையும் வழங்க வேண்டும். ஆட்சி, அதிகாரம், பணம், நெருக்குதல், அழுத்தங்களுக்கு இடம் கொடாமல் அச் செய்திகளைத் துணிச்சலுடன் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயம் கிடைக்கச் செய்வதில் மேற்சொன்ன ஆட்சி, அதிகாரம், பணம், அழுத்தங்கள், நெருக்குதல்களுக்கு இடம் தராமல் போராட வேண்டும். இதனை ’லெப்ட் ஆஃப் த சென்டர்’ என்று கூறுவார்கள். ’இடதும் அல்ல; வலதும் அல்ல. மையம். அந்த மையத்தில் இடது’ என்பது ஊடக தர்மமாகப் போற்றப்படுகிறது.
நீதி பரிபாலனத்துக்கும் இது பொருந்தும்! இன்னும் சொல்லப் போனால் இந்திய மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றமாகத்தான் இருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இதைத்தான் செவ்வனே செய்துள்ளது.
கருத்துரிமை குறித்த வால்ட்டேரின் முக்கியத்துவம் மிக்க கருத்துடன் தீர்ப்பு தொடங்குகிறது: “உனது கருத்து எனக்கு பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் அந்தக் கருத்தைக் கூறும் உரிமைக்குத் தடை ஏற்பட்டால் உனது கருத்துரிமைக்காகப் போராடி உயிர் விடவும் தயங்கமாட்டேன். இந்த வாக்கியம் இந்த வழக்குக்கும் பொருந்தும்.”
கருத்துரிமை, பேச்சுரிமைக்கு மட்டுமல்ல சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் அனைத்துக்கும் இது பொருந்தும்.

பெருமாள் முருகன்
பெருமாள் முருகன்

அது மட்டுமல்ல, கால மாற்றத்தில் கருத்துகளும் கூட மாறுகின்றன. முன்பு தமக்குப் பிடித்த கருத்து பின்னர் தமக்கு ஒவ்வாததாக மாறுகிறது. இடைப்பட்ட காலத்தின் சமூக ஓட்டம் மற்றும் தமது அனுபவங்கள் கற்றுத் தந்த பாடம் போன்ற தாக்கங்களால் ஒருவருடைய கருத்துகள் மாறுகின்றன. இதில் கருத்துப் பிடிவாதம் என்பது சரியில்லை. ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று யாரும், யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அதுபோல ஒரு நாவல் பிடிக்கவில்லை என்றால் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டியதுதான். இதைச் சாதாரன மனிதர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இதுதான்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஒரு நாவலைத் தூசு தட்டி எடுத்து, ஆணாதிக்க சக்திகளும், வலதுசாரி மத அடிப்படைவாதிகளும் உள்ளூர் ஆதிக்கச் சாதிகளைத் தூண்டிவிட்டு ஒன்றுமில்லாத பிரச்சனையைக் கிளப்பினர். அவதூறு பரப்பினர். பாதிக்கப்பட்ட எழுத்தாளரின் குடும்பமே பாதிக்கப்பட்டது. அவர் மன்னிப்பு கோரியும் கேட்காமல் கடையடைப்பு நடத்தினர். பேச்சுவார்த்தை என்ற பெயரில் அரசு அலுவலகத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது. அந்த எழுத்தாளர் மனம் இடிந்து ‘தனக்குள் உள்ள எழுத்தாளன் இறந்து விட்டான்’ என்கிறார். அப்படியும் அவர்கள் ஆத்திரம் தணியவில்லை. இந்த அநியாயத்தைக் கண்டித்து கருத்துரிமைக்கு ஆதரவாகச் சிறு சிறு கண்டனக் கூட்டங்கள் நடத்தக்கூட அரசும் காவல்துறையும் அனுமதிக்கவில்லை, ஜனநாயகமே இங்கு கேலிக்கூத்தானது.
அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியவர்கள். இதில் அரசே தலையிட்டாலும் அதற்குப் பணியாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் இரு தரப்புகளையும் தீர விசாரித்து யாருக்குச் சட்டம் மறுக்கப்பட்டதோ, யாருடைய எழுத்துரிமை பாதிக்கப்பட்டதோ அத் தரப்புக்கு நியாயம் செய்துள்ளது. மேலும் படைப்பாளியின் கருத்துரிமை குறித்து சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் எவரும் தீர்மானிக்க முடியாது என்றும் இந்த வழக்கில் அரசமைப்பு வழங்கியுள்ள கருத்துரிமை எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வழங்கப்படுவதில் தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு என்பது வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. அதிலும் ஆதிக்க சாதிகளின் தீண்டாமையும் வலதுசாரி மத பாசிசமும் தமிழ்நாட்டில் தலையெடுக்கத் துடிக்கும் இத் தருணத்தில் வழங்கப்பட்ட அரியதோர் தீர்ப்பு.
அதனால்தான் ஆதிக்க சக்திகளும், வலதுசாரிகளும் இதனை ஏற்க முடியாமல் தவிக்கிறார்கள். அரசு மற்றும் நிர்வாகத்தில் உள்ள ஆதிக்க சக்திகளைக் கையில் போட்டுக்கொண்டு நடத்தி வந்த ஜனநாயகப் படுகொலைகளை இனியும் தொடர முடியாது என்ற ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகிறார்கள்.
குருமூர்த்தி
குருமூர்த்தி

வலதுசாரி அறிவுஜீவி குருமூர்த்தி ’தினமணி’ நாளிதழில் தொடர்ந்து இரண்டு நாட்கள், மேற்கண்ட தீர்ப்பு பற்றி விமர்சித்துக் கட்டுரை எழுதுகிறார். இன்று (திங்கள்) காலை வந்த ’தமிழ் இந்து’வில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் கட்டுரை வெளி வந்துவிட்டது என்பதற்காக அவசர, அவசரமாக அதே குருமூர்த்தியின் நேர்காணல் ’தமிழ் இந்து’ இணையப் பதிப்பில் வெளியாகிறது. என்ன நெருக்கடியோ!
‘இந்த வழக்கில் தீர்ப்பு போதிய தெளிவுடன் வழங்கப்பட்டவில்லை’ என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறார் குருமூர்த்தி. யாருக்குத் தெளிவில்லை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். முதலில் வரலாறு, தொன்மம், புனைவு ஆகியவற்றுக்கான வேறுபாடுகளையும் அவை இணையும் புள்ளிகளையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும். வரலாற்றை அடிப்படையாகக் கொண்டாலும் நாவல் என்பது புனைவுதான். அதில் ஒரு எழுத்தாளர் தனியொருவரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கவில்லை; வாழ்க்கையில் நிகழ்ந்த, நிகழும் முரண்பாடுகளை முன் வைக்கிறார். அதை வாசகர்கள் ஏற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதனை விவாதத்துக்கு உட்படுத்தலாம். எந்த ஒரு தனி நபரையும் குறிப்பிடாத வரையில் அது சமூகக் கருத்தாக, சமூக விழுமியமாகப் பார்க்கப்பட்டு தர்க்கத்துக்கு உள்ளாக்கலாம். ஒரு எழுத்தாளர் ஒரு படைப்பை அதற்காகத்தான் படைக்கிறார். அதற்காகத் தமது தரப்பை அனைவரும் ஏற்றாக வேண்டும் என்று எந்த எழுத்தாளரும் வற்புறுத்துவதில்லை. கச்சை கட்டுவதுமில்லை. அதுதான் ஜனநாயகம். இதையெல்லாம் ஏற்கும் சகிப்புத்தன்மை கூட வலதுசாரி, மத பாசிசத்திடம் துளியும் கிடையாது.
 
ராமதாஸ்
ராமதாஸ்

அடுத்ததாக, பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பான வழக்கை இரு தரப்பு நியாயங்களோடு சென்னை உயர்நீதிமன்றம் அணுகவில்லை என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
அதோடு, புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ சிறுகதையும், வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நெடுங்கதையும் வழக்கு மற்றும் போராட்டங்களின் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்தே நீக்கப்பட்டதையும் ராமதாஸ் ’பெருமையுடன்’ சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஜனநாயகம், தீண்டாமை ஒழிப்பு, காதல், கவிதை இதெல்லாம் அவருக்கு எப்போதும் ஒவ்வாமை ஏற்படுத்துபவை ! மேலும் தமது பகுதியில் ஆதிக்க சாதி அரசியலை வளர்த்தெடுத்தது போல் தமிழகம் முழுவதும் ஆதிக்க சாதி அரசியலைக் கட்டியமைப்பதற்காக ஓயாமல் வேலை செய்பவர். அவரிடமும் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாதுதான்.
ஆமாம்! நடு நிலைமை என்பது மதில் மேல் பூனையா?