சென்னை:

அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்பத்தின்படி, ஆளில்லா விமானத்தை தயாரிக்க 8 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.


அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை எம்ஐடி மேம்படுத்தியுள்ளது.
இது குறித்து எம்ஐடி விமான ஆய்வு மைய இயக்குனர் செந்தில் குமார் கூறும்போது, எம்ஐடி வடிவமைத்து மேம்படுத்திய ஆளில்லா விமானத்தை தயாரித்து விற்பதற்கு 8 நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் தயாரித்த ஆளில்லா விமானங்களை தமிழ்நாடு மற்றும் கேரள போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்திய ராணுவத்துக்கும் ஆளில்லா விமானத்தை சப்ளை செய்ய முடிவு செய்துள்ளோம்.
இதற்காக இந்திய ராணுவத்துக்கு இந்த ஆளில்லா விமானம் குறித்து விளக்கியுள்ளோம்.

மேலும் இந்திய விமானப் படை நடத்தும் மெஹர் பாபா சவால் போட்டியிலும் நாங்கள் தயாரித்துள்ள ஆளில்லா விமானம் பங்கேற்கிறது.
இதற்காக 50 ஆளில்லா விமானங்கள் தேவைப்படுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால், எங்களது ஆளில்லா விமானங்கள் பாதுகாப்புப் படைகளில் பயன்படுத்தப்படும்.

எங்கள் தொழில்நுட்பத்தின் படி கம்பெனிகள் ஆளில்லா விமானத்தை தயாரிக்க வேண்டும். இந்த வருமானம் ராயல்டியாக திரும்ப கிடைக்கும். அந்த தொகை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்றார்.