நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 8 கேரள பயணிகள் நேபாள ஓட்டலில் மரணம்

காத்மண்டு

கேரளாவைச் சேர்ந்த 4 குழந்தைகள்  உள்ளிட்ட 8 பேர் நேபாள ஓட்டலில் மரணம் அடைந்தது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழு நேபாள நாட்டுக்கு விடுமுறை சுற்றுலா சென்றுள்ளனர்.  அவர்கள் சுற்றுலாவை முடித்து விட்டுத் திரும்பும் வழியில் போகாராவுக்கு சென்றுள்ளனர்.   அந்த வழியில் உள்ள டாமன் என்னும் பகுதியில் ஒரு ஓட்டலில் அவர்கள் இரவு தங்கி உள்ளனர்.   இரு அறைகளில் அவர்கள் தங்கி இருந்தனர்.

ஒரு அறையில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 8 பேரும் மற்றொரு அறையில் 7 பேரும் தங்கி உள்ளனர்.   அந்தப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 2500 ,மீட்டர் உயரத்தில் இருந்ததால் கடும் குளிர் இருந்துள்ளது.   எனவே அவர்கள் தங்கள் அறையைச் சூடாக்க கேஸ் ஹீட்டரை இரவு முழுவதும் பயன்படுத்தி உள்ளனர்.

காலையில் அந்த அறையில் இருந்த 8 பேரும் மயக்க நிலையில் இருந்ததால் ஓட்டல் ஊழியர்கள் பயந்து  போய் காவல் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். காவல் துறையினர் அவர்களை விமானம் மூலம் காத்மண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அங்குள்ள மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

கேஸ் ஹீட்டரால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் இறந்திருக்கலாமென கூறப்படுகிறது.  நேபாள காவல்துறை  இந்த விபத்தில் பிரபின்குமார் நாயர், சரண்யா, ரஞ்சித் குமார், இந்து ரஞ்சித் ஆகியோரும், ஸ்ரீபத்ரா, அபிநவு சூர்யா, அபி நாயர் மற்றும் வைஷ்ணவ் ரஞ்சித் ஆகிய குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.