கேரளா: நிவாரண முகாம்களில்   தவிக்கும் 8 லட்சம்  மக்கள்..!

கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 8 லட்சம் மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் பெய்த வரலாறு காணாத பெரு மழையால் பத்துக்கும் அதிகமான மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். பல லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் பலியானார்கள்.

இந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். வீடு திரும்பியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் வீடு கட்ட ஒரு லட்ச ரூபாய் வட்டியில்லா கடன் அளிக்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

ஆனாலும் 8 லட்சத்து 69 ஆயிரம் பேர் இன்னும் வீடுகளுக்குத் திரும்பமுடியாமல் முகாம்களில்   தங்கியிருக்கிறார்கள். இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த மக்கள் வசித்த பகுதிகளில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. வடிந்த சில பகுதிகளிலும் வீடுகள் முற்றிலும் சேதமாகிவிட்டன. ஆகவே இந்த மக்கள் இன்னமும் முகாம்களில் தவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.