குருகிராம்

த்தியப் பிரதேச அரசைக் கவிழ்க்க குருகிராமில் உள்ள ஒரு ஓட்டலில் காங்கிரஸ் மற்றும் அக்கட்சி ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ௮ பேரை தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக தான் ஆட்சி செய்யாத மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.  குதிரைப்பேரம் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்குவதாக அவர்கள் கூறுகின்றனர்.  கோவா மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் வரை நடந்தவற்றை அவர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முதல்வராகப் பதவி ஏற்று ஆட்சி செய்து வருகிறார்.  அவர் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவினர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் தெரிவித்தார்.   இதை பாஜக மறுத்தது.

இந்நிலையில் மத்தியப்பிரதேச நிதி அமைச்சர் தருண் பானோட், “பாஜக எங்கள் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்வது உண்மைதான்.  எங்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாபுலால் சிங் தொலைப்பேசியில் பேசினார்.  அவர் தன்னையும் மற்றும் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக பாஜகவினர்  குருகிராமில் உள்ள ஐடிசி மராத்தா ஓட்டலில் தங்க வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த 8 பேரில் 4 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். நான்கு பேர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் சுயேச்சைகள் ஆவார்கள்.   இவர்களைச் சந்திக்க எங்களது அமைச்சர்கள் ஜெய்வர்தன் சிங் மற்றும் ஜீது பட்வாரி ஆகிய இருவரும் அங்குச் சென்றனர்.  அதில் ஒருவருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பையொட்டி அவர்கள் அமைச்சர்களைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

குருகிராம் அமைந்துள்ள அரியானாவில் இப்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. எனவே அம்மாநில காவல்துறையினர் முன்னாள் பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவின் உத்தரவுப்படி சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியில் விடவில்லை.    அவர்கள் அமைச்சர்களைச் சந்திக்கவும் அவர்கள் தடை செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவரான பாஜக உறுப்பினர் கோபால் பார்கவா, “மேலிடத்தில் இருந்து ஒரு உத்தரவு வந்தால் உங்கள் அரசு 24 மணி நேரம் கூட நிலைத்து நிற்காது “ என கமல்நாத்திடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.