மோடியின் அரசை துளைத்தெடுக்கும் 8 கேள்விகள்

டில்லி

கவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் 8 கேள்விகள் மத்திய அரசை துளைத்தெடுப்பதாக நேஷனல் ஹெரால்ட் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

சமீப காலங்களாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல வகையான கேள்விகள் அரசுக்கு எழுப்பப் பட்டு வருகின்றன.   அந்த கேள்விகளில் ஒரு சில கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்காமல் உள்ளது.   அதே நேரத்தில் அந்த கேள்விகள் பலரால் மீண்டும் கேட்கப்படுகிறது.   இவ்வாறு எட்டு கேள்விகள் மத்திய பாஜக அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் தருவதாக நேஷனல் ஹெரால்ட் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்த கேள்விகள் பின் வருமாறு :

1.      மோடியின் பட்டப்படிப்பு : பிரதமர் மோடி கடந்த 1978 ஆம் வருடம் டில்லி பல்கலைக்கழகத்தில் பி ஏ பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.   ஆனால் அந்த வருடம் பி ஏ பட்டம் பெற்றவர்களின் பெயர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை எனக் கூறி அது குறித்த விவரங்களை டில்லியை சேர்ந்த நீரஜ் சர்மா என்பவர் கேட்டிருந்தார்.    டில்லி பல்கலைக்கழகம் விவரம் அளிக்காததால் அவர் மத்திய தகவல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.

2.      பணமதிப்பிழப்பு : மத்திய கூட்டுறவு வங்கிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மாற்றியது எவ்வளவு என மனோரஞ்சன் ராய் என்பவர் கேள்வி எழுப்பி உள்ளார்.   பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நிர்வாக இயக்குனராக இருந்த அகமதாபாத் மத்திய கூட்டுறவு வங்கியில் ஐந்தே நாட்களில் அதிக அளவில் நோட்டுக்கள் மாற்றப்பட்டதாக வந்த தகவலை அடுத்து இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

3.      கள்ள ரூபாய் நோட்டுக்கள் : கள்ள நோட்டுக்களை அடியோடு அழிக்க  பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.   ரிசர்வ் வங்கி 971.162 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுக்களையும் 470.972 கோடி மதிப்பிலான ரூ.1000 நோட்டுக்களை மாற்றி உள்ளது.   இதில் எத்தனை கோடி அளவுக்கு கள்ள நோட்டுக்கள் இருந்தன என்னும் கேள்வி மத்திய நிதி அமைச்சகத்துக்கு எழுப்பப்பட்டுள்ளது.

4.      ஜன் தன் கணக்குகள் : குறைந்த பட்ச தொகை வைக்க தேவை இல்லாத ஜன் தன் வங்கிக் கணக்குகள் மூலம் யூனியன் வங்கியில் மட்டும் ரூ. 93.82 கோடி பணமதிப்பிழப்பு சமயத்தில் மாற்றப்பட்டுள்ளது.   அனைத்து வங்கிகளிலும் இந்த கணக்குகள் மூலம் மாற்றப்பட்ட தொகை எவ்வளவு என கேட்கப்பட்டுள்ளது.

5.      ஆதார் எண் : அரசின் 210 இணைய தளங்களில் பொதுமக்களின் ஆதார் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இவ்வாறு வெளியிடுவது பொதுமக்களின் தனி மனித உரிமை மீறல் எனும் போது அரசே அதை செய்தது ஏன்?

6.      நாகா அமைதி அமைப்பு : நாகா அமைதி அமைப்புக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை குறித்து வெங்கடேஷ் நாயக் என்பவர் கேள்வி எழுப்பி உள்ளார்.  அவர் இந்த அமைப்பினருக்கு ஊதியம் வழங்கியது எவ்வளவு உள்ளிட்ட பல விவரங்களை கேட்டுள்ளார்.   இது இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் எனக் கூறி அரசு பதிலளிக்காததால் நாயக் மேல்முறையீடு செய்துள்ளார்.

7.      எரிவாயு இணைப்பு : பிரதமர் எரிவாயு இணைப்பு திட்டத்தின் மூலம் நாடெங்கும் இலவச மற்றும் சலுகை கட்டணத்தில் எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டது.  ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் ஒரு இணைப்பு கூட வழங்கப்படவில்லை.    இதற்கான காரணம் குறித்து கேட்கபட்ட கேள்விகளுக்கு இன்னும் விடை வரவில்லை.

8.      ஆயுஷ் அமைச்சகம் : யோகா தினத்தன்று யோகா ஆசிரியர்களாக இஸ்லாமியர்கள் நியமிக்கப் படுவார்கள் என அறிவிக்கப் பட்டிருந்தது.   இந்த பயிற்சி ஆசிரியர் பணிக்கு 3841 இஸ்லாமியர்கள் விண்ணப்பித்திருந்த போதிலும் இதுவரை ஒருவர் கூட பணி அமர்த்தப்படாதது ஏன் என கேட்கப்பட்டுள்ளது.   அத்துடன் குறுகிய கால பயிற்சி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய 711 இஸ்லாமியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.   அவர்களிலும் யாரும் பணி அமர்த்தப் படாதது ஏன் என்னும் கேள்விக்கும் இன்னும் விடை வரவில்லை

இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுல்ளது.