சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவருமான என்.சீனிவாசன் “தமிழ்நாடு பிரீமியர் லீக்” என்ற புதிய கிரிக்கெட் லீக்கை உருவாக்கியுள்ளார். ஐபிஎல் போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த லீக்கில் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன.
தென் சென்னை, மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல், தூத்தூக்குடி, திருவள்ளூர், கோவை, காரைக்குடி ஆகிய நகரங்களை அடிப்படையாக வைத்து இந்த எட்டு அணிகளும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த எட்டு அணிகளில் தூத்துக்குடி விளையாட்டு நிறுவனம் ஏலம் எடுத்துள்ள அணி,  அதிகபட்சமாக  5.21 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. . அணி உரிமையாளர் பெயர் ஆல்பர்ட் முரளிதரன்.
தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த மெட்ரோநேஷன் சென்னை டிவி நிறுவனத்தின் சிவந்தி ஆதித்தன் 2வது அதிகபட்ச தொகையைக் கொடுத்து ஏலம் எடுத்தவராவார். . இவர் ஏலம் ரூ. 5.13 கோடிக்கு அணியை ஏலம் எடுத்துள்ளார்.
a
இலங்கையைச் சேர்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைக்காவும் கூட ஒரு அணியை வாங்கியுள்ளளது. இந்த அணி ரூ. 5.01 கோடிக்கு ஒரு அணியை ஏலம் எடுத்துள்ளது.
இவர்கள் தவிர கோத்தாரி மெட்ராஸ் நிறுவனத்தின் ரபீக் அகமது ரூ. 4.01 கோடிக்கும், ரூபி பில்டர்ஸ் மனோகரன் ரூ. 3.69 கோடிக்கும், வி.பி சந்திரசேகர் ரூ. 3.48 கோடிக்கும், எச்ஆர் சீனிவாசன் ரூ. 3.42 கோடிக்கும், செட்டிநாட் அப்பேரல்ஸின் ஹரிஹரன் ரூ. 3.3 கோடிக்கும் அணிகளை ஏலம் எடுத்துள்ளனர்
இந்த எட்டு அணிகளையும் ஏலம் விட்டதன் மூலமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு ரூ. 33.24 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 3 நகரங்களில் 27 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.  3 வார காலம் போட்டிகள் நடைபெறும். இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எட்டு அணிகளும் மோதும். ஒவ்வொரு அணியும் தத்தமது குழுவில் இடம் பெற்றுள்ள அணியுடன் தலா 2 முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 1 கோடி பரிசாக வழங்கப்படும். . 2வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ. 60 லட்சம் பரிசு உண்டு. அரை இறுதிக்கு வரும் அணிகளுக்கு தலா ரூ. 40 லட்சமும்,  மற்ற அணிகளுக்கு ரூ. 25 லட்சம் போட்டிக் கட்டணமாக கிடைக்கும்.
இந்தப் போட்டிகளில் ஆட பிற மாநில வீரர்களையும் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.