டெஸ்ட்டில் அதிகமுறை தொடர் நாயகன் – அஸ்வின் புதிய சாதனை..!

சென்னை: டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்றவர் என்பதில், இம்ரான்கான் உள்ளிட்டவர்களின் சாதனையை சமன் செய்துள்ளார் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர் நாயகன் விருதை வென்றார் அஸ்வின். இதன்மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அஸ்வின், கடந்த 10 ஆண்டுகளில் 8வது முறையாகத் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

இதன்மூலம் தொடர் நாயகன் விருதை 8 முறை வென்ற பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிரதமருமான இம்ரான்கான், நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஆகியோரின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். இதுவரை அஸ்வின் 28 டெஸ்ட் தொடர்களில் 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதன்பின், 2012-13ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2012-13ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2015-16ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2015-16ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2016-17ம் ஆண்டில் விண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2016-17ம் ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் தொடர் நாயகன் விருதை அஸ்வின் வென்றுள்ளார்.

அதிகமான தொடர் நாயகன் விருதை இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் பெற்றுள்ளார். 11 விருதுகளை வென்று முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜேக்ஸ் காலிஸ் 9 விருதுகளை வென்றுள்ளார். 3வது இடத்தில் தற்போது அஸ்வின், இம்ரான்கான் ஆகியோர் உள்ளனர்.

மேலும், ஒரே டெஸ்ட் தொடரில் 30க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 5வது வீரராக அஸ்வின் இடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் முதல்முறையாக இந்தச் சாதனையைச் செய்த வீரர் எனும் பெருமையையும் அஸ்வின் பெற்றார்.