மராட்டிய மாநிலத்தில் கொடும் சித்ரவதைகளுக்கு ஆளான 8 வயது தலித் சிறுவன்!

மும்பை: கோயில் வளாகத்தில் தெரியாமல் நுழைந்துவிட்ட குற்றத்திற்காக, வெறும் 8 வயதேயான ஒரு தலித் சிறுவனை, சாதி இந்து நபர் ஒருவர் மோசமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கிய சம்பவம், மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

மதங் என்ற அட்டவணை சாதியைச் சேர்ந்த ஒரு சிறுவன், மராட்டிய மாநில வார்தாவிலுள்ள ஒரு கோயில் வளாகத்தில் விளையாடும்போது அறியாமல் நுழைந்துவிட்டான். இதற்காக அவனைப் பிடித்துவிட்ட அமோல் டோர் என்ற ஒரு சாதி இந்து நபர், அவனின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி, வெயிலில் கொதித்துக் கொண்டிருந்த டைல்ஸ் கல்லில் அமரச் செய்துள்ளார்.

தன்னை விட்டுவிடும்படி அந்தப் பாவப்பட்ட சிறுவன் எவ்வளவோ கதறியும்கூட, அந்த மனிதன் விடவில்லை. தன் உடலின் பின்புறத்தில் மோசமான நெருப்புக் காயங்களுக்கு உள்ளான அந்த சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறான்.

வார்தாவில் தற்போது 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கொடூர நபர் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விஷயத்தை காவல்துறையினர் சரியாக கையாளவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தாங்கள் காவல்துறையில் புகார் கொடுத்ததால், தங்களை சாதி இந்துக்கள் மீண்டும் பழிவாங்குவார்களோ என்று அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.