80 கோடி ரூபாய் சிலை கடத்தல்: தலைமறைவு ஆசாமி கைது

சென்னை:

80 கோடி ரூபாய் மதிப்பிலான 8 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் ராமானுஜபுரம்  மணிகண்டேஷ்வரர் கோவிலில் இருந்த சிவன்பார்வதி உலோக சிலைகள் திருட்டு போனது. அதுபோலவே,   திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சவுந்திரியபுரம் ஆதிகேசவபெருமாள் கோவிலில் இருந்து ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் சிலைகளும் திருடப்பட்டன. இது குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும்,  வந்தவாசி அருகே உள்ள பையூரில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் ஆலயத்தில்  இருந்து,  பிரசன்ன வெங்கடேஷ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சக்கரத்தாழ்வார் ஆகியோரின் சிலைகளும் திருடப்பட்டன.

இந்த எட்டு ஐம்பொன்  சிலைகளின் மதிப்பு ரூ. 80 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்பட்டது. இந்த சிலைகளை தனலிங்கம் என்பவர், இரு சக்கர வாகனத்தில் எடுத்துச்சென்றபோது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் மற்றும் உதவி ஆய்வாளர் ஜூலியஸ் சீசர் ஆகியோர் ஆட்டோவில் துரத்திச் சென்று மடக்கினர். அவரிடம் இருந்து 8  சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மீட்கப்பட்ட ஐம்பொன் சாமி சிலைகள்

இந்த திருட்டு விவகாரத்தில் முற்ற குற்றவாளியாக கூறப்பட்டது, புழல் அருகே உள்ள  காவாங்கரை பகுதியை ஜெயக்குமாரை போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவானார். இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு, செங்குன்றம் அருகே  பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஜெயக்குமாரை கைது செய்தனர்.

3 ஆண்டுகளாக காவல்துறைக்கு போக்கு காட்டி வந்த ஆசாமி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  மேலும் பல சிலை திருட்டு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஜெயக்குமார் தலைமறைவாக இருந்து வருவது  குறித்து தகவல் அளித்தவர்களுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தனது சொந்த பணத்தை வெகுமதியாக பணம் கொடுத்து பாராட்டினார்.