Random image

கழிப்பறையிலும் கண்காணிப்பு காமிரா : தென் கொரிய மக்கள் அச்சம்

சியோல், தென் கொரியா

தென் கொரியாவில் கழிப்பறை, உடை மாற்றும் அறைகளில் கண்ணுக்கு தெரியாத கண்காணிப்பு காமிராக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் வருடத்தில் இருந்தே தென் கொரிய நாட்டுப் பெண்களின் ஆபாச வீடியோக்கள் அதிக அளவில் உலவத் தொடங்கி உள்ளன.   பெரும்பாலான வீடியோ பதிவுகளில்  அந்தப் பெண்கள் உடைமாற்றுவது போன்ற காட்சிகளைக் கொண்டிருந்தன.   இது குறித்து அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த பதிவுகள் அனைத்திலும் உள்ள பெண்கள் காமிரா முன் இருப்பது போல் இல்லாமல் இயற்கையாக் இருந்ததால் காவல்துறையினர் இந்த பதிவுகள் இவர்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர்.    அதைத் தொடர்ந்து நடந்த சோதனைகளில் உடைமாற்றும் அறை, பொதுக் கழிப்பறை போன்ற இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த காமிராக்கள் மிகவும் சிறிய அளவில் கண்ணுக்கு தெரியாத அளவில் இருந்துள்ளன.   பொதுக் கழிப்பறைகளில் கழிவறைத் தொட்டிகள், கைகழுவும் இடத்தின் அடிப்பகுதி,  துணிக்கடைகளில் உடை மாற்றும் அறையின் சுவர், மற்றும் குபைத் தொட்டியின் மேல் பகுதி ஆகிய இடங்களில் இத்தகைய காமிராக்கள் இருந்துள்ளன.

இதனால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.   குறிப்பாக பெண்கள் தற்போது பொதுக் கழிவறைகளை உபயோகிப்பதையும்,  துணிக்கடைகளில் உடைகளை அணிவதையும் தவிர்த்து வருகின்றனர்.    அரசு இதற்காக சியோல் நகரில் மட்டும் சுமார் 8000 பணியாளர்களை நியமித்துள்ளது.   அவர்கள் நகர் முழுவதும் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணுக்கு தெரியாத கண்காணிப்பு காமிராக்களை தேடி வருகின்றனர்.