பெங்களூரு: கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட 4 நாளில் 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள், பொதுமக்களிடையே மீண்டும் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், பொதுமுடக்கத்தில் மத்தியஅரசு அளித்துள்ள தளர்வுகள் காரணமாக, பள்ளிக்கல்லூரிகள் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளில் இறுதியாண்டு மாணாக்கர்கள் வர பல மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி  கர்நாடகா மாநிலத்திலும் கடந்த 17-ம் தேதி முதல் கல்லூரிகள் செயல்பட உத்தரவிடப்பட்டது.  அதையடுத்து, அங்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு, கல்லூரிகளுக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 4 நாட்களில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பரிசோதித்ததில்,  81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மாலை நிலவரப்படி  8,69,561 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 11,621 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது 24,752 பேர் சிகிச்சையில்  இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.