டெல்லி:

நாடு முழுவதும்,  கடந்த 3ஆண்டுகளில் சமையல் எரிவாயு கசிவு மற்றும்  வெடிப்பு காரணமாக 813 பேர் பலி உள்ளதாகவும், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டு உள்ளதாகவும்  நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. சுமார் 20 அமர்வுகளுடன் டிசம்பர்13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இன்றைய கூட்டத்தில், சமையல் எரிவாயு விபத்து,கசிவு குறித்து எழுதிய கேள்விகளுக்கு மத்திய பட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில்,  கடந்த 3 ஆண்டுகளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாயு கசிவு மற்றும் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் 3,063 விபத்துக்கள் நடைபெற்று உள்ளது. அவர்களில், 813 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த விபத்துக்கள் தொடர்பாக, எண்ணெய் நிறுவனங்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.56.73 கோடி உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.