மேலும் 83 பேருக்கு பாதிப்பு: தவறான முடிவுகளால் ரேபிட் கிட் சோதனையை நிறுத்தியது ராஜஸ்தான்…

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு  ரேபிட் கிட் மூலம்  நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் தவறான தகவல்களை கொடுத்தால், அதன் மூலம் சோதனை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில்  இன்று மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,659-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும்  25 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், இந்தியா சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்த ரேபிட்கிட்டை மாநிலங்களுக்கு அனுப்பி கொரோனா சோதனை செய்ய அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, அனைத்து மாநிலங்களும் ரேபிட் கிட் மூலம் கொரோனா சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட் கிட் மூலம்  நடத்தப்பட்ட சோதனைகளில் பல தவறுகள் ஏற்பட்டதால், ஐசிஎம்ஆர் அறிவுரைப்படி அதன் மூலம் பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து கூறிய ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா,  மாநிலத்துக்கு தேவையான ரேபிட்கிட் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ஐசிஎம்ஆர்) இருந்து  பெற்று பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் நடத்தப்படும் சோதனைகள் பயனுள்ளதா என்பதை அறிவதற்கு, எங்கள் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் மற்றும் எங்கள் மருத்துவத் துறைத் தலைவர் கொண்ட குழுவை அமைத்தோம்.
இந்த கிட் மூலம் வரும் சோதனை முடிவுகள்  90 சதவீதம் துல்லியமாக இருக்க வேண்டும், ஆனால் அது 5.4 சதவீதம் மட்டுமே இருந்தது.
சரியான நடைமுறையை பின்பற்றியே இந்த கருவிகளை பயன்படுத்தினோம். ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்களையும் பின்பற்றினோம். ஆனால் அந்த கருவி இன்னும் தரத்தை பூர்த்தி செய்யவில்லை. எனவே சோதனைகளை நிறுத்தினோம்.
கருவியின் துல்லியத்தன்மை கேள்விக்குரியதாக இருப்பதால் நாங்கள் பரிசோதனையை நடத்த மாட்டோம் என்று ஐ.சி.எம்.ஆருக்கு தகவல் அனுப்பி உள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.