பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 84 பேர் பலியானார்கள்.
பிரான்ஸில், அந்நாட்டு  தேசிய தினமான பாஸ்டில் தினம் கொண்டாடப்பட்டது.  “ப்ரோமனேட் தேஸாங்கிலே” என்றழைக்கப்படும் இந்த நிகழ்வில் நடக்கும் வாண வேடிக்கைகள் மிகவும் பிரலமானவை.

பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள நீஸ் நகரில் இந்த கொண்டாட்டங்கள் நடந்தபோது, அங்கு கூடியிருந்த மக்களின் மீது லாரி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டனர்.  18 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எண்ணற்றோர் காயமடைந்துள்ளனர்.
லாரியின் டிரைவர் சுமார் 2 கிமீ தூரம் பெரும் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டியதாக அரச வழக்குரைஞர் ஷான் மிஷேல் ப்ரெத்ரை தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து, “இந்தத் தாக்குதலை, பயங்கரவாதத் தாக்குதல்” என வர்ணித்துள்ளார்.
இதையடுத்து, பிரான்ஸில் ஏற்கனவே அமலில் உள்ள அவசர நிலை மேலும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.