கேரளாவில் மொத்தமுள்ள 630 திரையரங்குகளில் 7 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்.

ஊரடங்கு காரணமாக அங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி வழங்கினார்.

கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தியேட்டர்களை திறப்போம் என அவற்றின் உரிமையாளர்கள் அறிவித்த நிலையில், சினிமா உலக பிரதிநிதிகள் முதல்-அமைச்சர் பினராயி விஜயனை, சந்தித்து பேசினர்.

இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

சரியாக 307 நாட்களுக்கு பிறகு அங்கு தியேட்டர்கள் திறக்கப்படும் நிலையில், சென்சார் முடிந்து 85 சினிமாக்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

இவற்றில் மோகன்லால் நடித்துள்ள ‘மரக்கார்- அரபிகடலிண்டே சிம்ஹம்’, மம்முட்டியின் ‘ஒன்’, ‘தி பிரீஸ்ட்’ உள்ளிட்ட படங்கள் அடக்கம்.

இது தவிர 35 படங்கள் ஷுட்டிங்கில் உள்ளன.

– பா. பாரதி