‘நீட்’ தேர்வில் 85 சதவிகித இடஒதுக்கீடு: தமிழகஅரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

டில்லி:

‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது.

மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கு 85 சதவிகித இடஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நீட் தேர்வு குறித்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில்,  முருகவேல் என்பவர், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையை, நீட் தேர்வு அடிப்படையில் நடத்தாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என கடந்த மாதம் 30ந்தேதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரினார்.

ஆனால், அவரது வழக்கு அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கூறிய உச்சநீதி மன்றம் விசாரணை 4ந்தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி இன்று நீட் தேர்வு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கடினமாக உள்ளது என தமிழக மாணவர்கள் எதிர்ப்பது ஏன். மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ள நடைமுறை குறித்து விழிப்புணர்வு நமக்கு அவசியம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதனிடையே, நீட் தேர்வில் பங்கேற்ற தமிழக பள்ளி பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

இதன் காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.