லண்டன்: தனது 85 வயதில் ஒரு கிரிக்கெட் வீரர், இல்லையில்லை, கிரிக்கெட் தாத்தா ஓய்வுபெறப் போகிறாராம்! இந்த தாத்தா மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்தவர்.

ஒரு வேகப்பந்து வீச்சாளரான இவர், விளையாடி வருவது பிரிட்டன் உள்ளூர் அணிகளுக்காக.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சாமுவேல் செசில் ரைட் என்ற பெயருடைய இந்தப் பந்து வீச்சாளர் கடந்த 1950களில் ஒரேயொரு முதல்தர போட்டியில் மட்டுமே பங்கேற்றார். ரிச்சர்ட்ஸ் மற்றும் கேரி சோபர்சுடன் விளையாடி அனுபவமெல்லாம் உண்டு இவருக்கு.

கடந்த 1959ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இவர், பின்னர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். உள்ளூர் அணிகளுக்காக தொடர்ந்து விளையாடத் தொடங்கினார். ஒருநேரத்தில், முழு ஃபார்மில் இருக்கும்போது 5 சீசனில் 538 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கணக்கின்படி, ஒவ்வொரு 27 பந்திற்கும் ஒரு விக்கெட் இவரின் கையில் வந்து விழுந்தது. இதன்படி மொத்தம் இவருக்கு கிடைத்ததோ 7000 விக்கெட்டுகள். ஆனால், இப்போட்டிகள் ஐசிசி அங்கீகாரம் அற்றவை என்பதால் இவரின் சாதனைகள் எதுவும் கணக்கில் வராது.

தற்போது 85 வயதாகும் நிலையில், வரும் செப்டம்பர் 7ம் தேதி அப்பர்மில் அணிக்காக தான் பங்கேற்கும் போட்டியுடன் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார் இந்த முதுபெரும் வீரர்!