சென்னை:

மிழகத்தில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், வாக்கு எண்ணிக்கையை  பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் என்றும், வாக்குகள் எண்ணும் விதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு கூறியுள்ளார்.

தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 19ந்தேதி வாக்கு பதிவு முடிந்தது. அனைத்து வாக்குகளும் நாளை (23ந்தேதி) எண்ணப்படுகிறது. இதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு,  வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கே தொடங்கும் என்று தெரிவித்தார்.

முதலில்  தபால் வாக்குகள் காலை 8மணிக்கு எண்ணப்படும் என்றவர், அதையடுத்து 8.30 மணி முதல்  ஈவிஎம் வாக்குகளும் எண்ணப்படும். அதன்பிறகே ஒப்புகை சீட்டு (விவிபாட்) பதிவுகள் எண்ணப்படும் என்றும், இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளதாக கூறியவர், வெப் காமிரா மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படும், அதுபோல  வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்  என்றார்.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என்றவர்,  VOTER HELPLINE மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளும், குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாக வும் வாக்குகள் எண்ணப்படும்  என்றும்,  வாக்கு எண்ணிக்கை மையங்களில் 36 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் அவர்களுடன் 1,520 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இருப்பதாகவும் கூறி உள்ளார்.