Random image

பிரமோற்சவம் 8வது நாள்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தங்கத்தோரோட்டம்

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கடந்த 7 நாட்களாக  நடைபெற்று வருகிறது. 8வது நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சகணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க ஆடி அசைந்து மாட வீதிகளில் தேர் ஊர்ந்து வருகிறது.

நேற்றைய காலை  விழாவில்  மலையப்ப சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் இரவு சந்திரபிரபை வாகனத்தில் சந்திர பிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வந்தார் இந்த நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தரிசித்து ஆசி பெற்றனர்.

நேற்று இரவு நடைபெற்ற சந்திரபிரபை வாகன வீதி உலா

உலகிலுள்ள ஜீவராசிகள் வளரத் தேவையான வெப்பத்தை அளிப்பவர் சூரிய பகவான். நவகிரங்களுக்கும் அவரே தலைவர். அவர் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆரோக்கியம் வழங்குகிறார்.  தன் கிரணங்களால் உலகுக்கு ஒளியூட்டும் 7 குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணர் வாகனத்தில் யோகமுத்திரையுடன், பத்ரி நாராயணராக செந்நிற பூக்கள், குருவிவேர் உள்ளிட்ட மலர்களால் செய்த மாலைகளை அணிந்து மாடவீதியில்  நேற்று காலை வலம் வந்தார்.

நேற்று  இரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். குளிர்ந்த ஒளி பொருந்திய சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மலர்களால் ஆன மாலையை அணிந்து கொண்டு மலையப்ப சுவாமி வலம் வந்தார். அப்போது மாடவீதியில் கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.

இன்று நடைபெற்று வரும் திருத்தேரோட்டம்

இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கோயிலின் பெரிய தேரில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார். தேரோட்டத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதைதொடர்ந்து இன்று மாலை குதிரை வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருள உள்ளார்.

தேரின் முன்பு  ஜீயர்கள் குழாம் வேதகானம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். வாகன சேவையின் பின் கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

‘பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி, கோலாட்டம், பரத நாட்டியம் ஆடிக்கொண்டு மாட வீதிகளில் வலம் வந்தனர். மாட வீதிகளில் நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.

மாட வீதியின் இரு புறத்திலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர்.

நாளை, 21-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கத்தோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.