சென்னை:

8வழிச்சாலை திட்டத்தில்  தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து இன்று தீர்ப்பு கூறிய நிலையில், அதிமுக கூட்டணி கட்சியான பாமக வரவேற்பு தெரிவித்து உள்ளது.

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வழக்கில், நிலம் கையப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக  தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யும், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட ஏராளமானோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த நீதிமன்றம், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடனே உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.

உயர்நீதி மன்றத்தின்  தீர்ப்புக்கு பொதுமக்கள் மிகுந்த  வரவேற்பு தெரிவித்து உள்ளனர். பாதிக்கப் பட்ட மக்கள் இனிப்பு வழங்கி தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை தொடர்ந்த பாமக வழக்கறிஞர் பாலு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  பிறப்பித்த தமிழக அரசின் அறிவிப்பானையை  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளதை வரவேற்பதாக கூறினார்.

மேலும்,  8 வழிச்சாலை திட்டம் தேவையற்றது, விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறியவர்,  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு 5 மாவட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து,  மத்திய அரசும், தமிழக அரசும் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று, மேல்முறை யீட்டுக்கு உச்சநீதிமன்றம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய பாலு,  அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும், 8 வழிச் சாலை திட்ட எதிர்ப்பில் பாமக உறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் கூட்டணிக்கு முன்பாக பாமக 8வழிச்சாலை உள்பட பல்வேறு தமிழக அரசின் திட்டங் களுக்கு எதிராக கடுமையாக போராட்டத்தில் ஈடுபட்டும், எடப்பாடி மீது அதிரடி குற்றச்சாட்டுக் களை கூறி கவர்னரிடம் மனு கொடுத்தும், ஆட்சியை அகற்ற தீவிரமாக போராடிய நிலையில், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அதிமுக கூட்டணியில் போய் ஒட்டிக்கொண்டது. இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், கூட்டணி கட்சியான அதிமுக  அரசுக்கு எதிராக அன்புமணி தொடர்ந்த வழக்கில் அதிமுகவுக்கு பாதகமாக உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதை பாமக வரவேற்றுள்ளது. இதன் காரணமாக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

திட்ட அறிவிப்பாணை ரத்து செய்ததன் எதிரொலியாக சேலத்தில் விவசாயிகள், பொதுமக்கள்  இனிப்பு வழங்கி மகிழ்ச்சி  தெரிவித்தனர்.