8 வழிச்சாலை வழக்கு: எத்தனை மரங்கள் புதிதாக நடப்பட்டது? உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை:

சென்னை – சேலம் பசுமை வழிச்சாலைக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், புதியதாக எத்தனை மரங்கள் நடப்பட்டது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியது.

சென்னை -சேலம் 8வழிச்சபாலைக்காக, சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவதாகவும், இந்த சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்   பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் என  பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது  அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் கேள்விகளால் துளைத்து எடுத்தனர். தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆர்வம் காட்டவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இத்திட்டத்திற்காக தர்மபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டது குறித்தும், பதிலுக்கு மரம் நடப்பட்டது குறித்தும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம்  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், அது குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் இதற்கு  பதிலளிக்க கால அவகாசம் அளிக்க கோரியும் அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 8 வழி சாலை வழக்கில், தொடக்கத்திலிருந்தே, அரசு வழக்கறிஞர்கள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். சமீபத்தில் சென்னை முழுவதும் வைக்கப்பட்ட பேனரில் அரசு வழக்கறிஞர் ஒருவரின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவை அரசு வழக்கறிஞரே மீறுவதை ஏற்க முடியாது எனத் நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு வழக்கறிஞர் பதவிக்கு ஒரு மரியாதை உள்ளது. அதை கெடுக்கும் விதத்தில் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்தனர்.

வழக்கு விசாரணைக்காக அரசு வழக்கறிஞரை பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமா?. எந்த தகவலும் இல்லை அவகாசம் வேண்டும் என்றே கூறுகின்றீர்கள். வெட்டிய மரங்களுக்கு பதிலாக எத்தனை மரங்கள் நடப்பட்டன?. சட்ட விரோதமாக மரம் வெட்டியவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கை  ஒத்தி வைத்தனர்

You may have missed