டெல்லி துணி குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் தீயில் கருகி பலி

டெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள  துணிகள் சேமித்து வைக்கும் குடோனில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், தீயில் சிக்கி உடல் கருகி 9 பேர் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான, கிராரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான  துணிக் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு 1மணி அளவில் திடீரென தீ பிடித்துள்ளது. இதுகுறித்து, அங்கிருந்த காவலர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல்கொடுக்க, விரைந்து  5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இச்சம்பத்தின் காரணமாக 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. பாதிக்கப் பட்ட அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இவர்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மின்கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தற்போது, தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.