ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி நகரில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி நகரில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்களில் 9 பேர் அரசு முன்னிலை ஊழியர்கள் ஆவார்கள்.  இவர்கள் காவல்துறை வருமானத் துறை ஆகிய இடங்களில் அத்தியாவசிய பணி புரியும் ஊழியர்கள் ஆவார்கள்.  இவர்களில் யாரும் வெளிநாடு சென்று வந்தவர்கள் இல்லை என்பதும் யாருக்கும் அத்தகையோருடன் தொடர்பு இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம் இந்த பகுதியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பியாப்பு மதுசூதன் ரெட்டி நடத்திய நிவாரணப் பொருட்கள் பேரணி எனக் கூறப்படுகிறது.   இந்த நகரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்க இவர் அரிசி, பழங்கள் போன்றவற்றை 25 டிராக்டர்களில் அடுக்கி ஒன்றன் பின் ஒன்றாகப் பேரணி போல் எடுத்துச் சென்ற போது அதில் இந்த அரசு ஊழியர்கள்  பங்கு பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த பேரணியில் இடம் பெற்ற டிராக்டர்களில் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.   அவற்றில் நடிகர்கள், பிரபாஸ் மற்றும் மகேஷ் பாபு, ரிலையன்ஸ், டாடா குழுமத் தலைவர்கள்  ஆகிய படங்களுடன் ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியின் மனைவி ஒய் எஸ் பாரதியின்ப்டமும் இடம் பெற்று இருந்தது.

ஸ்ரீகாளஹஸ்தி நகர நகராட்சி ஆணையர், “பாதிக்கப்பட்டோரில் இருவர் தலைமைச் செயலக ஊழியர்கள், ஆறு பேர் வருமானத்துறை ஊழியர்கள், மற்றும் ஒருவர் காவல்துறையைச் சேர்ந்தவர் ஆவார்.  ஆனால் இவர்களில் யாரும் மதுசூதன் ரெட்டியின் பேரணியில் கலந்துக் கொள்ளவில்லை.   இவர்களுக்குத் தொற்று எப்படி உண்டானது என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.  இவர்கள் கொரோனா குறித்துக் கணக்கெடுப்பு எடுக்கும் போது தொற்று உண்டாகி இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர்,  ”மதுசூதன் ரெட்டியின் பேரணியின்  போது அவரும் ஒரு ஸ்கூட்டரில் உடன் வந்து பொருட்கள் வழங்கிய தொண்டர்களுக்கு கட்டளைகள் இட்டபடி வந்தார். அப்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது.  இந்த பொருட்கள் வழங்கும் நிகழ்வு முழு பாதுகாப்புடன் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் நடந்தது” எனத் தெரிவித்துள்ளனர்.