சென்னை: உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்கும் வகையில், அதற்கென்று 9 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியாத நிலையில், ஏப்ரல் 15 முதல் 17ம் தேதி வரை அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அப்துல் குத்துாஸ் அடங்கிய அமர்வு மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் வழக்குகளை விசாரிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக, ஊரடங்கை அமல்படுத்தியதால், உயர்நீதிமன்றம் வருவதை தவிர்த்து, காணொலி காட்சி மூலமாக, கடந்த வாரங்களில் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

இதன்பொருட்டு, ‘ஜூம் ஆப்’ செயலியை, மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து விசாரணை நடந்தது.