மும்பை

காராஷ்டிர முதல்வர் மற்றும் 8 பேர் போட்டியின்றி மேலவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

மகாராஷ்டிர முதல்வராக பதவி வகிக்கும் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராக இல்லை.  அவர் பதவி ஏற்று ஆறு மாதங்களுக்குள் உறுப்பினர் ஆக வேண்டிய அவசியம் உள்ளது.  இந்நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 9 மேலவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்தது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்த 9 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவில்லை.   இந்த மாத இறுதிக்குள் உத்தவ் தாக்கரே மேலவை உறுப்பினர் ஆகவில்லை எனில் அவருடைய முதல்வர் பதவியை இழக்க நேரிடும்.  எனவே அவரை நியமன உறுப்பினராகத் தேர்வு செய்ய அமைச்சரவை பரிந்துரை அளித்தது.  அதை ஆளுநர் கருத்தில் கொள்ளவில்லை.

அதையொட்டி பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே  தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  அதன் பிறகு ஆளுநர் உத்தரவுக்கிணங்க மேலவை இடங்களுக்கு வேட்புமனு பெறப்பட்டது.  இந்த 9 இடங்களுக்கும் 9 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  இன்று வேட்பு மனு  திரும்பப் பெறக் கடைசி நாள் ஆகும்.  எனவே இன்று வேட்பு மனு அளித்த 9 பேரும் மேலவைக்கு தேர்வு செய்யபட்டுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதில் முதல்வர் உத்தவ் தாக்க்அரே மற்றும் நீலம் கோர்கே ஆகியோர் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  பாஜக சார்பில் ரஞ்சித்சிங் மோகித் பாடில், கோபிசந்த் பாடல்கர், பிரவீன் தட்கே, மற்றும் ரமேஷ் காரத் ஆகியோர் உறுப்பினராகி உள்ளனர்.  அத்துடன் தேசிய வாத காங்கிரஸின் சசிகாந்த் சிண்டே, அமோல் மித்கரி மற்றும் காங்கிரசின் ராஜெஷ் ராதோட் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.