லாலு பிரசாத் பாதுகாவலர்கள் 9 பேருக்கு கொரோனா: லாலுவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு

ராஞ்சி: பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த, 9 பாதுகாவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் தண்டனை பெற்றார். அவர் இப்போது ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உடல் நலக் கோளாறு காரணமாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பாதுகாப்புக்காக 9 காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந் நிலையில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். புதிய பாதுகாவலர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

பாதுகாவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால், லாலு பிரசாத் யாதவுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.