காதல் திருமணம் செய்த அத்தையை சுட்டுக்கொன்ற 9 வயது சிறுவன்..

காதல் திருமணம் செய்த அத்தையை சுட்டுக்கொன்ற 9 வயது சிறுவன்..

பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பது உலகம் அறிந்த செய்தி.

ஆனால் பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த தங்கள் குடும்பத்துப் பெண்ணை சுட்டுக் கொல்வதற்கு, தங்கள் பிள்ளைக்கே, ஆயுதப் பயிற்சி கொடுத்துள்ள நிகழ்வு பதற வைப்பதாக உள்ளது.

அங்குள்ள பஞ்சாப் மாநிலம் சரகோடா கிராமத்தில் இந்த கோரச்சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமம் லாகூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

உயர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண், பெற்றோர் எதிர்ப்பை மீறி அந்த கிராமத்து இளைஞரை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

ஆரம்பத்தில் அந்த பெண்ணுடன் குடும்பத்துக்கு மோதல் இருந்தாலும் , நாளாவட்டத்தில் ராசி ஆகிவிட்டனர்.

எனினும் தங்கள் விருப்பத்தை மீறி அந்த பெண் வேறொரு நபரைத் திருமணம் செய்ததை அவர்கள் மறக்கவில்லை.

என்றாவது ஒருநாள், அவரை ’’கவுரவக்கொலை’’ செய்தே தீர வேண்டும் என வஞ்சத்தில் இருந்த  அந்த பெண்ணின், (தந்தை வழி உறவான) மருமகனுக்குத் துப்பாக்கியால் சுடப் பயிற்சி கொடுத்து வளர்த்துள்ளனர்.

அவனுக்கு இப்போது 9 வயது தான் ஆகிறது. குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் செவ்வாய்க்கிழமை அந்த ;பெண், சர்கோடா கிராமத்துக்கு வந்துள்ளார்.

சிறுவனின் குடும்பத்தினர், ‘’அத்தையைச் சுட்டுக்கொன்று விடு’’ என உத்தரவிட, அவனும் அத்தையைச் சுட்டுள்ளான்.

சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்து போனார்.

கவுரவக் கொலையை நிகழ்த்தி முடித்ததும், சிறுவன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

-பா.பாரதி.