ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன், உலகின் இளம் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெறவுள்ளார். அவர் விரைவில் பல்கலைப் பட்டம்பெற உள்ளார்.

அச்சிறுவனின் பெயர் லாரன்ட் சிமன்ஸ். எய்ந்தோவன் என்ற தொழில்நுட்பப் பல்கலையில், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் இவர் பட்டம் பெறவுள்ளார். வழக்கமான வயதில் படிக்கும் மாணாக்கர்களுக்கே இந்தப் பாடப்பிரிவு கடினம் என்று கூறப்படுகிறது.

இந்த அசாதாரண சிறுவன் பிறந்தது பெல்ஜியத்தில். இவர் தனது 8 வயதிலேயே மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார். பட்டப்படிப்பை முடிப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலஅளவு வெறும் 9 மாதங்கள் மட்டுமே.

இவரின் அடுத்த திட்டம் மருத்துவத் துறையிலும் பட்டம் பெறுவது. இவரின் திறமையை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் ஆசிரியர்கள்தான்! 4 வயதில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய சிறுவன், ஓராண்டிலேயே அதை முடித்துவிட்டார். பல தேர்வுகளை நடத்தி, அவரின் திறமையை ஆசிரியர்கள்தான் மேலும் வளர்த்தனர்.

இச்சிறுவன் வயிற்றில் இருந்தபோது, அவரின் தாயார் அதிகளவில் மீன் உண்டார் என்று அவரே தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.