90 நாட்கள் கெடாது: விரைவில் ஆவின் பால் ‘டப்பாக்களில்’ விநியோகம்

சென்னை:

மிழகத்தில் விரைவில் ஆவின் பால் துருபிடிக்காத டப்பாக்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பபட்டு வருகின்றன.

இவ்வாறு. சுகாதாரமானதும், துருபிடிக்காததுமான  டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஆவின் பால் 90 நாட்கள் வரை கெடாது என்று கூறப்படுகிறது.

தற்போது மேலைநாடுகளில் இதுபோன்று துருப்பிடிக்காத டப்பாக்களில் சுகாதாரமான முறையில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஆவின் பால் தவிர, நெய், மற்றும் குளிர்பானங்கள் டெட்ரா பாக்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வெளிநாடுகளை போல ஆவின் பாலையும் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான நவீன இயந்திரங்கள் ரூ.30 கோடி செலவில்  இறக்குமதி செய்யப்பட்டு, சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால்பண்ணையில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வந்தன.

தற்போது, பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் டப்பாக்களில் அடைக்கப்பட்டுள்ள ஆவின் பால் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு  1 லட்சம் லிட்டர் பால் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும்,  நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் இந்த பாலை பயன்படுத்தலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆவின் பால் டப்பாக்களில் அடைக்கப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்பபட்டு வரும் நிலையில், தற்போது நவீன முறையில் புதிய வகையான டப்பாவில் ஆவில் பால் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இநத  புதிய டப்பா பால் விலை மற்றும்  அதன் விற்பனை தொடக்க விழா ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.