சென்னை:

ள்ளிக்கரணை ஏரி 90சதவிகிதம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக உயர்நீதி மன்றம் அமைத்த குழுவின் தலைவரான மூத்த வழக்கறிஞர்  பிஎஸ்.ராமன் உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

ள்ளிக்கரணை சுற்றுப் பகுதிகளின் நீர் ஆதாரமாக விளங்கிய பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி வளர்ச்சியை பின்னுக்குத்தள்ளி உள்ளது. கடந்த 30 ஆண்டு களில் ஏரியின் 90 சதவிகிதம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், அந்த பகுதியின் வளர்ச்சி தடை பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளிக்கரணையில் உள்ள பெரிய ஏரி, 150 ஏக்கர் பரப்பளவு உடையதாக இருந்தது. இந்த ஏரியில் தேக்கப்படும் நீர், சுற்றுப்பகுதி விவசாய நிலங்களின் பாசனம் மற்றும் மக்களின் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.  நகரமயமாக்கல் அதிகரித்ததன் விளைவாக, இந்த ஏரியை ஒட்டியிருந்த விவசாய நிலங்கள் அனைத்தும், வீட்டு மனைகளாக உருமாறின.

இதன் தொடச்சியாக, அங்கு வீடுகள் கட்டப்பட்டன. நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததால், உள்ளூர் அரசியல்வாதிகள், ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் நீர்த்தேக்க பகுதிகளையும், கூறு போட்டு விற்க ஆரம்பித்தனர். குறைந்த விலைக்கு நிலம் கிடைத்ததால், பொதுமக்களும் அவற்றை போட்டி போட்டு வாங்கினர்.

இதனால், 150 ஏக்கராக இருந்த ஏரி, 30 ஆண்டுகளில், வெறும், 5 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி விட்டது. இதேநிலை நீடித்தால், அடுத்த சில ஆண்டுகளில், ஏரி இருந்த சுவடே தெரியாமல், அழிந்து போகும் அபாயம் உள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும், அரசு கண்டு கொள்ளாத நிலையில்,  ‘நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாக்க, தலைமை செயலர் தலைமையில், சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். மாவட்ட அளவில், கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுக்களை ஏற்படுத்த வேண்டும். மாதம் ஒரு முறை, சிறப்பு குழுவினர், ஆலோசனை நடத்த வேண்டும். மாவட்ட குழுக்களின் நடவடிக்கைகளை, அப்போது ஆய்வு செய்ய வேண்டும்’ என, மே மாதம், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடங்கவும், அந்தந்த மாநிலங்களில் உள்ள ஈரநிலங்களை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டதையடுத்து தொடங்கப்பட்ட ஒரு பொது நல வழக்கின் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உதவும் வகையில் மூத்த வழக்கறிஞர் பி எஸ் ராமனை நியமித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் உள்ள கழுவேலி, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன் தாக்கல் செய்தார்.

அதில், 30 ஆண்டுகளுக்கு முன்பு 50 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருந்த ஈரநிலம் 2007 ல் 5.99 சதுர கி.மீ ஆகவும், தற்போது 3.17 சதுர கி.மீ. அளவுக்கு இருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்  150 ஏக்கருக்கும் அதிகமான சதுப்பு நிலம் மாஸ் ரேபிட் டிரான்ஸிட் சிஸ்டம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓஷன் டெக்னாலஜி, விண்ட் எனர்ஜி டெக்னாலஜி சென்டர் என‘மத்திய அரசு கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான குடியிருப்புகள், ஐடி பூங்காக்களால் சூழப்பட்டு இருப்பதாக  குழுவின் மூத்த ஆலோசகர் றும்  பி எஸ் ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சதுப்பு நிலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பக்கங்களில் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் மற்றும் ஆலந்தூர் மாநகராட்சி ஆகியவற்றால் பராமரிக்கப்படும் இரண்டு குப்பைக் கழிவுகள் சதுப்பு நிலத்திற்கு தொடர்ச்சியான சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தி வருவதாகவும் ராமன் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தற்போதைய நிலையானது,  சதுப்பு நிலத்தை விட அதிகமான கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் வெளியேற்ற வழிவகுத்துஉள்ளது என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் மூலம் மண் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும்,  “அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் தழுவலுக்கான மையத்தின் ஆய்வின்படி, இந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வண்டல் மாதிரிகளின் ஆய்வில், இந்த நிலப்பகுதியானது, ஆண்டுக்கு 0.0020 ஜிகாகிராம் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சப்படுவதைக் காட்டுகின்றன, அதே நேரத்தில் ஒரு வருடத்தில் 18.2 ஜிகாகிராம் வெளியேற்றப்படுகிறது.

சதுப்பு நிலமானது அதன் நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து நன்னீரைப் பெறாவிட்டால் அல்லது குப்பை அகற்றப்படாவிட்டால், அதனால், சதுப்புநிலத்திற்கு கார்பன் டி ஆக்சைடை உறிஞ்ச முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பள்ளிக்கரணை ஏரிக்கு வரும் பறவைகளை ஒரு தரப்பினர் வேட்டையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள ராமன், அங்குவரும் வெள்ளை நாரைகள் போன்ற பறவைகள், அங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளால் பாதிக்கப்படும் என்றும்,  இது எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் எனவே, இதைத் தடுக்க விரைவாக ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.

இங்குள்ள குப்பை கழிவுகளை உடடினயாக வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும்,  மாற்றும் இடம் கிடைக்கும் வரை, தற்போது உள்ள குப்பை கிடங்கின்  பரப்பளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதோடு,  அத்துமீறல் அச்சுறுத்தலை சமாளிக்க, பதிவு அதிகாரிகள், கார்ப்பரேஷன், வனத்துறை, வருவாய் அதிகாரிகள் மற்றும் திட்டமிடல் அதிகாரிகளின் பிரதிநிதித்துவத்துடன் ஒரு விழிப்புணர்வு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும்  மேலும் அத்துமீறல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ராமன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த அறிக்கையானது சென் உயர்நீதி மன்ற நிதிபதிகள் , நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அதைடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு ஆகஸ்ட் 21 ம் தேதிக்குள் தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

ஏற்கனவே பள்ளிக்கரணை  ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, போலீசார் ஒத்துழைக்கவில்லை என்றால், ராணுவத்தையும் அனுப்ப நேரிடும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.