மதுரை:
துரையில் இன்று புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த 10 பறக்கும் படைகளை அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 2,332 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 56,845பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1,045 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 31,316பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 38 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த  தாசில்தார், காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு குழுவிலும் தலா ஒரு தாசில்தார், போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் இடம்பெறுவார்.இந்த குழுவானது 24 மணி நேரமும் செயல்படுவதுடன், தனி மனித இடைவெளி இல்லாமல் இருக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், 8 மணிக்கு மேல் செயல்படும் கடைகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்.

முதலில், மாநகராட்சியின் 100 வார்டுகளில் இந்த குழு செயல்படும். பின்னர், புறநகர் பகுதிகளில் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.