மாநிலங்களவையில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் 


டில்லி:

மாநிலங்கள் அவையில் உள்ள எம்.பி.க்களில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.55 கோடி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மாநிலங்கள் அவை உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தற்போது மாநிலங்களவையில் உள்ள 229 உறுப்பினர்களில்201 பேர் (88 சதவீதம்) பேர் கோடீஸ்வரர்கள். உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.55.62 கோடி.

இதில் அதிகபட்சமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினரான மகேந்திர பிரசாத்துக்கு ரூ.4 ஆயிரத்து 78.41 கோடி சொத்துக்கள் இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக, சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர்  ஜெயா பச்சனுக்கு ரூ. ஆயிரத்து 64 கோடி சொத்துக்கள் உள்ளன.

அதைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர் ரவிந்திர கிஷோர் சின்ஹாவுக்கு ரூ.857.11 கோடி சொத்துக்கள் இருக்கின்றன.

கட்சிகளின் அடிப்படையில் பாஜக உறுப்பினர்கள் 64 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.27.80 கோடி.   காங்கிரஸ் உறுப்பினர்கள் 50 பேரின் சராசரி சொத்துமதிப்பு ரூ.40.98 கோடி.

சமாஜ்வாதி கட்சியின் 14  உறுப்பினர்களின்  சராசரி சொத்து மதிப்பு ரூ.92.68 கோடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.22 கோடி.

154 எம்.பி.க்கள் வேட்புமனுத் தாக்கலின் போது வழங்கிய பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “229 மாநிலங்களவை உறுப்பினர்களில் 51 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 20 பர் மீது மிகத் தீவிரமான கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி