கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 90ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை:

ர்நாடகாவில் தொடர்ந்து மழை மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளதால், கர்நாடக  அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 90 ஆயிரம்  கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

தென் மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பொழியத் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக்ததில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், நீலகிரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே  முழு கொள்ளவை எட்டியுள்ள கர்நாடக அணைகள் தற்போது தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக, அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவையும் அதிகரித்து உள்ளது.

இதன்படி கர்நாடகாவில் உள்ள  கபினி அணையில் இருந்து இன்று காலை முதல்  தமிழகத்திற்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்தும் 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வினாடிக்கு 90ஆயிரம் கன நீர் வந்துகொண்டிருக்கிறது.

இதன் காரணமாக காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து இந்த ஆண்டு தொடர்ந்து அதிக அளவிலான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏற்கனவே கடந்த மாதம்  மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டியிருந்தது.

தற்போது நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவான  120 அடியை இரண்டாவது முறையாக எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து  தொடர்ந்து தண்ணீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருவதால்  டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர்.

தற்போது  நீர் திறப்பு விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேட்டூர் அணையின் நீர்மட்டம்-117.50 அடி, நீர்இருப்பு-89.53 டிஎம்சியாக உள்ளது நீர்மின் நிலையங்கள் வழியாக 22,500 கனஅடி நீரும், 16கண் மதகுகள் வழியாக 2,500கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் வரத்து அதிகம்  காரணமாக ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்கள் இயக்க 32வது நாளாக தடை நீடித்து வருகிறது.

கார்ட்டூன் கேலரி