காங்கோ நாட்டு சிறையில் இருந்து 900 கைதிகள் தப்பி சென்றதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் சிறைக் கைதிகள் தப்புவது, கலவரத்தில் ஈடுபடுவதும் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். கடந்த மாதம் தலைநகரான கின்சாச சிறையில் இருந்து சுமார் 4 ஆயிரம் கைதிகள் ஒரே நாள் இரவில் தப்பி ஓடினர். இதில் சிலர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து நேற்று வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள பெனி சிறைச் சாலையில் இருந்து 900 கைதிகள் தப்பி ஓடிவிட்டதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாத குழு ஒன்று சிறை அதிகாரிகள் 8 பேரை சுட்டுக் கொன்று விட்டு கைதிகளை விடுவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் அதிபர் ஜோசப் கபிலாவின் பதவிக்காலம் கடந்த வருடம் முடிவடைந்தது.

ஆனால் அவர் பதவியை விட்டு விலகாமல் தொடர்ந்து ஆட்சியை நீடித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக  அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.