உள்ளாட்சி தேர்தலுக்காக 92,000 வாக்குச்சாவடிகள் தயாராம்…! ஆனால், தேர்தல்?

சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 92,000 வாக்குச்சாவடிகள் தயாராக இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட தாமதப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக தேர்தல் வரும் வரும் என்றே கூறி தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மக்களை கடந்த 3 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். அதுபோல கடந்த மாதம் முடிவடைந்த தமிழக சட்டமன்றத்திலும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், தேர்தல் தேதி குறித்து வாய் திறக்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்காக  92,000 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும்,  சென்னை உள்பட 15 மாநகராட்சிகளில் 12,679 வாக்குச்சாவடிகளும், , 121 நகராட்சிகளில் 7,386 வாக்குச் சாவடிகளும்,  12,524 கிராம ஊராட்சிகளில் 63 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளது.

மிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், திமுகவின் . இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது வழக்குகள் முடிவடைந்தாலும், வாக்குச்சாவடி பிரிப்பு போன்ற நிர்வாக காரணங்களை கூறி தமிழகஅரசு தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து, காலம் தாழ்த்தி வருகிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தனி அலுவலர்களைக் கொண்டே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வருகிறது. இதன் காரணமாக, போதி நிதியின்றி, , உள்ளாட்சிகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இதுதொடர்பாக அரசியல் கட்சியினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டன.  ஆனால், தேர்தல் தேதிதான் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பது தமிழகஅரசுக்கே வெளிச்சம்….